

புதுடெல்லி:
கர்நாடகாவில் முதல் மந்திரி சித்தரமையா தலைமையிலான மந்திரி சபையில் எரிசக்திதுறை மந்திரியாக பதவி வகித்து வரும் டிகே ஷிவகுமார் இல்லத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தவிர, கர்நாடகாவில் குஜராத் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.
கனகபுரா, சதாஷிவநகர் ஆகிய இடங்களில் உள்ள மந்திரி ஷிவகுமார் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. குஜராத் எம்.எல்.ஏக்கள் 44 பேரும் மந்திரி ஷிவகுமார் பொறுப்பின் கீழ்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சோதனையில், ஷிவகுமார் இல்லத்தில் இருந்து ரூ.7.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மந்திரியின் இல்லத்தில் நடத்திய சோதனை மாநிலங்களவையில் பூதாகரமாக வெடித்தது. மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில் பேசிய அருண் ஜெட்லி, கர்நாடக மந்திரியின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை. விடுதியில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. எந்த ஒரு எம்.எல்.ஏவிடமும் சோதனை நடைபெறவில்லை.கர்நாடக மந்திரியிடம் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரு விடுதியில் மந்திரி தங்கியதால் மட்டுமே விடுதியில் சோதனை நடத்தப்பட்டது” என்றார். பணப்பட்டு வாடா மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாரதீய ஜனதா இழுக்க முயற்சிப்பதாக குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டினார். உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை சுற்றி கடும் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்களவையில், இதே விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ”வருமான வரித்துறை சோதனையையும் மாநிலங்களவை தேர்தலையும் தொடர்பு படுத்தி பார்க்க கூடாது. குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த விடுதியில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை. விடுதியில் தங்கியிருந்த கர்நாடக மந்திரியை வருமான வரித்துறை அதிகாரிகள் விடுதிக்கு சென்று அழைத்து மட்டுமே சென்றனர்”என்றார்.