கவர்னருக்கு எதிரான பாலியல் புகார் குறித்து தகவல் இல்லை: உள்துறை அமைச்சகம் விளக்கம்

தென் மாநிலத்தை சேர்ந்த கவர்னருக்கு எதிரான பாலியல் புகார் குறித்து தகவல் எதுவும் வரவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கவர்னருக்கு எதிரான பாலியல் புகார் குறித்து தகவல் இல்லை: உள்துறை அமைச்சகம் விளக்கம்
Published on

புதுடெல்லி:

தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றில் கவர்னராக பணியாற்றுபவர், தனது கவர்னர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவரது விருப்பப்படிதான் பெண் ஊழியர்கள் நடக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

மேலும் கவர்னரின் இந்த செயலால் கவர்னர் மாளிகையின் மாண்பு கெட்டு விட்டதாக கூறி புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நிறுவனங்கள் தீவிர விசாரணையில் இறங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

இது தென்னக மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கவர்னருக்கு எதிரான பாலியல் புகார் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது’ என தெரிவித்தார்.

முன்னதாக மேகாலயாவில் கவர்னராக இருந்த சண்முகநாதன் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதால் கடந்த ஆண்டு ராஜினாமா செய்திருந்தார். அவருக்கு எதிராக, கவர்னர் மாளிகையில் பணியாற்றிய சுமார் 100 பேர் அப்போதைய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com