

தேனி:
தேனி சவுத் இந்தியன் வங்கி மேலாளராக பணிபுரிந்து வருபவர் சுகந்தசெல்வி, உதவி மேலாளராக பணிபுரிபவர் சத்யா. கடந்த 24.1.2018-ந் தேதி தேனி பழைய ஜி.எச். ரோடு, வ.உ.சி. தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி கற்பக செல்வி (49) என்பவர் வங்கிக்கு வந்து புதிய கணக்கு ஆரம்பித்தார். அதன் பிறகு 80 கிராம் கொண்ட 8 வளையல்களை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடனாக பெற்றார்.
ஓராண்டு ஆகி விட்டதால் நகையை திருப்ப கோரி வங்கி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த முகவரியில் கற்பக செல்வி குடியிருக்கவில்லை என தெரிய வந்தது. அவர் வீட்டை காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு சென்று விட்டார். இதனிடையே வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் கற்பக செல்வயின் வளையல்களை மீண்டும் பரிசோதனை செய்த போது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என தெரிய வந்தது.
இது குறித்து வங்கி மேலாளர் சுகந்தசெல்வி தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து போலி நகைகளை வைத்து பணம் மோசடியில் ஈடுபட்ட கற்பக செல்வியை தேடி வருகின்றனர்.