

தேனி மாவட்டம், குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியானார்கள். காயம் அடைந்தவர்கள் மதுரை, தேனி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.
மதுரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை கலெக்டர் வீரராகவராவ் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். அவர் ஆஸ்பத்திரியிலே முகாமிட்டு காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதலும் கூறி வருகிறார்.
இன்று காலை ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீக்காயம் அடைந்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனை டீன் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு தீயில் காயமடைந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக கவனித்து வருகின்றனர்.
இதில் சிலர் தனியார் மருத்துவமனை மற்றும் வெளியூர் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற விரும்பியதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது மற்றும் உறவினர்கள் விருப்பத்தின் பேரிலேயே வேறு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
எங்கு சென்றாலும் அவர்கள் நல்ல முறையில் குணம் பெற வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் தங்குவதற்கு தனி அறை ஒதுக்கப்பட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தீக்காயம் அடைந்தவர்களின் நிலைமை குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படுகின்றன. மருத்துவமனை டீன் அனுமதியின்றி யாரும் சிகிச்சை அறைக்குள் செல்ல முடியாது.