

தேனி மாவட்டம்,போடி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றத்திற்கு சென்ற 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.
மேலும் 13 பேர் பலத்த தீக்காயத்துடன் மதுரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில் திவ்யா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மீதமுள்ள 12 பேர் மதுரை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கண்ணன் (வயது 26), தேவி (26), சிவசங்கரி (26), அனுவித்யா (25), சாய் வசுமதி (26) ஆகிய 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நிவ்ய நிக்ருதி (24), மீனா ஜார்ஜ் (32) ஆகியோரும் கிரேஸ் கென்னட் ஆஸ்பத்திரியில் சக்திகலா (40), சதீஷ்குமார் (29), திவ்யா விஸ்வநாதன் (23) ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சுவேதா (28), பார்கவி (23) ஆகியோரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆஸ்பத்திகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவர்னரின் காலில் விழுந்து கதறினர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய கவர்னர், தீக்காயம் பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமாக திரும்பி வருவார்கள். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவார்கள் என்று ஆறுதல் கூறினார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கண்ணன் 90 சதவீத தீக்காயத்துடன், கிரேஸ் கென்னட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சக்திகலா, சதீஷ்குமார், திவ்யா, விஸ்வநாதன் ஆகியோர் 80 சதவீத தீக்காயங்களுடனும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்கவி, சுவேதா ஆகியோர் 75 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.