

தேனி:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. வழக்கமான ரேங்கிங் சிஸ்டம் முறைப்படி முடிவுகள் வெளியிடப்படாமல் கிரேடு அடிப்படையில் முடிவுகள் வெளியாகின. 1180 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு ஏ கிரேடு வழங்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், பெரியகுளம் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 7907 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7607 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். இது 96.20 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 94.66 சதவீதம் தேர்ச்சியடைந்த நிலையில் கூடுதலாக 2 சதவீதம் பேர் இந்த வருடம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 7011 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 6704 மாணவ-மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது 92.65 சதவீதம் ஆகும். கடந்த வருடம் 95.50 சதவீதம் தேர்ச்சி அடைந்திருந்தனர்.
மொத்தத்தில் தேனி மாவட்டத்தில் 14918 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 14311 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.93 சதவீதம் ஆகும். கடந்த வருடம் 95.11 சதவீதம் தேர்ச்சியடைந்திருந்தனர். கடந்த வருதைக் காட்டிலும் 0.82 சதவீதம் தேர்ச்சி அதிகமாகும்.
தேனி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 91 பள்ளிகள் மற்றும் 32 மெட்ரிக் பள்ளிகள் என 123 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.
மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடம் என்ற தகவல் எந்த பள்ளிகளிலும் அறிவிக்கப்படவில்லை. இது பல்வேறு தரப்பு மாணவர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் தேர்வு முடிவை காண பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது. தேர்வு முடிவுகள் செல்போனில் குறுந்தகவல் மூலம் வெளியிடப்பட்டதால் காலை முதலே தங்களது செல்போனில் தேர்ச்சி விபரத்தை காண ஆர்வமுடன் காணப்பட்டனர்.