தீவுத்திடல் அருகே கூவம் கரையோரத்தில் 3500 வீடுகள் அகற்றம்

தீவுத்திடல் அருகே கூவம் கரையோரத்தில் இருந்த வீடுகள் ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன. அங்குள்ள பொதுமக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
கிரேன் மூலம் வீடுகள் இடிக்கப்படுவதையும், உடமைகளை சுமந்தபடி வெளியேறும் பெண்ணையும் படத்தில் காணலாம்.
கிரேன் மூலம் வீடுகள் இடிக்கப்படுவதையும், உடமைகளை சுமந்தபடி வெளியேறும் பெண்ணையும் படத்தில் காணலாம்.
Published on

சென்னை:

தீவுத்திடல் அருகே கூவம் கரையோரத்தில் காந்தி நகர், எஸ்.எம்.நகர், இந்திரா காந்தி நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் 3,500 குடும்பங்களில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

கூவம் கரையோரத்தை ஆக்கிரமித்து இந்த வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த வீடுகளை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு பெரும்பாக்கத்தில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அந்த வீடுகளுக்கு குடியேற பொதுமக்கள் மறுப்பு தெரிவித்தனர்.

நாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேல் இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் இங்குள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள். திடீரென எங்களால் வேறு இடத்துக்கு செல்ல முடியாது என கூறினார்கள்.

ஆனாலும் வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதைத் தொடர்ந்து அந்த வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.

இதற்காக அப்பகுதியில் இன்று காலை முதலே 500-க் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.

அப்போது அங்குள்ள பொதுமக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். உங்களுக்கு வழங்கப்பட்ட மாற்று வீடுகளுக்கு செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் சிலருக்கு மட்டுமே மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மாற்று வீடு வழங்காதவர்கள் எங்கு செல்வார்கள்? என கேட்டு பொதுமக்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து சில வாலிபர்களை பிடித்து போலீசார் வாகனத்தில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே ஜே.சி.பி. மூலமாக வீடுகளை இடிக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி கொண்டு வெளியேறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com