

மாணவி அனிதா மரணத்தில் நீதி விசாரணை கோரும் பொதுநல மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், அரசியல் காரணங்களுக்காக ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் மாணவர்களை தூண்டி விட்டு சில கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன. இது போன்ற தூண்டுதல் காரணமாகவே மாணவி அனிதா தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்று கருத முடிகிறது.
எனவே மாணவி அனிதா தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற சட்டவிரோதமான போராட்டங்களுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவேண்டும். என அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வக்கீல் ஜி.எஸ்.மணி, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று ஆஜராகி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருவதால் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.