

சென்னை:
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், ‘இந்தோ சராசெனிக்’ கட்டிட கலை நுட்பத்தில் 1801-ம் ஆண்டு ஆங்கில பொறியாளர் ‘பால் பென்பீல்டு’ என்பவரால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. 216 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கலசமகால் கட்டிடத்தின் தரைதளத்தில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.
கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி நள்ளிரவில் இங்கிருந்த சமூக நல இயக்கக அலுவலக கட்டிடத்தில் தீப்பிடித்தது. தீயில் சிக்கி அலுவலக கோப்புகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. அத்துடன் கட்டிடத்தின் மேல் தளம் இடிந்து விழுந்தது. தற்போது இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி பழமை மாறாமல் கலை நுணுக்கத்துடன் சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்த இடம் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி சென்னை அரும்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் வழக்குகளை விசாரிக்கும் இந்த தீர்ப்பாயம் அமைந்துள்ள கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லை.
எனவே சேப்பாக்கம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள ‘கலச மகால்’ தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதன் தரைதளம், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் செயல்பட உள்ளது.
இதுகுறித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாய அதிகாரிகள் கூறியதாவது:-
அரும்பாக்கத்தில் இருந்து சேப்பாக்கம் கலச மகாலுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தை கடந்த மே மாதம் 27-ந்தேதி இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஐகோர்ட்டு நீதிபதிகள், முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஸ்வதந்த்ரகுமார் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்ள இருப்பதாக இருந்தது.
அன்று சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கமும் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை காலம் என்பதால் திறப்பு விழா ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
பொதுப்பணித்துறையை பொறுத்தவரையில் கட்டிடப்பணிகளை முற்றிலுமாக முடித்து கொடுத்து விட்டனர். இருந்தாலும் ஜூலை மாதம் பல்வேறு காரணங்களால் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் தற்போது தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தை வருகிற செப்டம்பர் மாதம் 2-ந்தேதி இடமாற்றம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.