கோவையில் மாமனாரால் கொலை செய்யப்பட்ட வாலிபரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது

கோவையில் குடும்ப தகராறில் மாமனாரால் கொலை செய்யப்பட்ட வாலிபரின் மனைவிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை (கோப்பு படம்)
குழந்தை (கோப்பு படம்)
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை கவுண்டம்பாளையம் இடையர் பாளையத்தில் உள்ள செட்டியார் அம்மாகாடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ராஜேந்திரன் (வயது 23). தனியார் நிறுவன ஊழியர். இவர் கவுண்டம்பாளையம் சக்திநகரை சேர்ந்த பெயிண்டர் குமார் (48) என்பவரின் மகள் ஷாலினியை (19) கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். ஷாலினி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷாலினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவரை உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்தம் குறைவாக இருந்ததால் டாக்டர்கள் சிகிச்சை அளித்து ரத்தம் ஏற்றினர். இதையடுத்து நேற்று காலை ஷாலினி தனது தந்தை வீட்டுக்கு திரும்பினார்.

அங்கு ராஜேந்திரனின் தாயார் உமாராணி, ஷாலினியின் தாயார் மீனா ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது மீனா, உமா ராணியிடம் உங்கள் மகன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். இதனால் தான் நாங்கள் ஷாலினிக்கு வளைகாப்பு செய்யக்கூட முன்வரவில்லை. மேலும் குழந்தை பிறந்தால் எப்படி காப்பாற்றுவார் என்று கேட்டுள்ளார்.

இதை அறிந்த ராஜேந்திரன், தனது மாமியார் மீனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் தனது மாமியார் மீனாவை கன்னத்தில் ஓங்கி அறைந்து தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா, நடந்த சம்பவம் பற்றி தனது கணவரிடம் கூறினார். உடனே அங்கு வந்த குமார், ராஜேந்திரனை தட்டிக்கேட்டுள்ளளார். இதன் காரணமாக அவர்கள் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த குமார் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து ராஜேந்திரனின் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடிய ராஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகனை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். குமாரின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ஆகும்.

இந்நிலையில் தந்தையும்- கணவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது ஷாலினி அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தார். இதனையடுத்து அவர் மீண்டும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று ஷாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். குழந்தை பிறந்த நேரத்தில் கணவரை இழந்த ஷாலினி பெரும் சோகத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com