

கோவை:
சார்ஜாவில் இருந்து தினமும் கோவைக்கு ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 3.30 மணிக்கு கோவை வரும் விமானம் மீண்டும் அதிகாலை 4.40 மணிக்கு சார்ஜா புறப்பட்டு செல்லும்.
அதேபோல் இன்றும் சார்ஜாவில் இருந்து 107 பயணிகளுடன் ஏர் அரேபியா விமானம் கோவை புறப்பட்டது. வழக்கத்தை விட 30 நிமிடம் தாமதமாக விமானம் கோவைக்கு வந்தது. அப்போது விமானி விமானத்தை ஓடுபாதையில் இறக்க முயன்றார். அந்த நேரத்தில் விமானத்தின் இடது பக்க இறக்கையில் ஒரு பறவை மோதி விபத்தானது.
இதில் விமானத்தின் இறக்கை கடும் சேதமானது. ஆனாலும் விமானியின் சாதுர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் 107 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தின் காரணமாக மீண்டும் சார்ஜாவுக்கு புறப்பட வேண்டிய விமானம் பறக்க முடியாததால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சார்ஜாவுக்கு புறப்பட தயாராக இருந்த 163 பயணிகள் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் உரிய நேரத்தில் சார்ஜாவுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பறவை மோதியதால் ஏர் அரேபியா விமானம் பலத்த சேதம் அடைந்து பறக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே மாற்று விமானம் மூலம் சார்ஜாவுக்கு பயணிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.