வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவியை அடித்து கொன்ற காவலாளி

வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவியை கணவன் அடித்து கொன்ற சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவியை அடித்து கொன்ற காவலாளி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மானம்புசாவடி மேட்டு எல்லையம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம் (வயது 30). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி காயத்திரி (23). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வது முறையாக காயத்திரி கர்ப்பமாக இருந்தார்.

திருமணத்தின் போது காயத்திரி வீட்டில் இருந்து சீர் வரிசையாக சுந்தரத்திற்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதாக கூறியிருந்தனர். திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆன பிறகும் அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுந்தரத்துக்கும் காயத்திரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் புதிதாக வீடுகட்டுவதற்கும் உங்கள் வீட்டில் இருந்து பணம் வாங்கி வா என்று சுந்தரம் மனைவியிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு சுந்தரத்துக்கும் - காயத்திரிக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த அவர் மனைவி காயத்திரியை தலையை பிடித்து சுவரில் தள்ளினார். இதில் காயத்திரி சுவரில் மோதி பலத்த காயம் அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயத்திரியை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுந்தரத்தை கைது செய்தனர். மேலும் காயத்திரி உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com