தஞ்சை-கும்பகோணத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தஞ்சை, கும்பகோணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோ‌ஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
கும்பகோணம் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோ‌ஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
Published on

கும்பகோணம்:

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்குவதுடன் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு உரிய முறையில் தீர்வுகாண வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த மே மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அமைச்சர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் பிரச்சனைகளை பேசி தீர்ப்பது என்றும், ஓய்வூதியர்களின் நிலுவை தொகையை முழுமையாக வழங்குவது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றாததால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் இன்றும், நாளையும் (14,15-ந் தேதிகளில்) மண்டல போக்குவரத்து கழக அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கும்பகோணம் தலைமை போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். சுமார் 200-க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பணிமனை வாயில் முன்பு அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பியப்படி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., த.மா.கா., தே.மு.தி.க., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட 14 தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்கள் போராட்டத்தால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

இன்று மாலை முதல் அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளனர். இதனால் மாலை முதல் பஸ் போக்குவரத்து இயக்கம் முடங்கும் நிலை உள்ளது.

இதனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் மாற்று டிரைவர்களை கொண்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதேபோல் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com