விளை நிலங்களை பாலைவனம் ஆக்க வரும் 24 எரிவாயு கிணறுகள்- தங்கபாலு அதிர்ச்சி தகவல்

24 எரிவாயு கிணறுகள் விளை நிலங்களை பாலைவனம் ஆக்க வருகிறது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Hydrocarbongas
விளை நிலங்களை பாலைவனம் ஆக்க வரும் 24 எரிவாயு கிணறுகள்- தங்கபாலு அதிர்ச்சி தகவல்
Published on

சென்னை:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரையிலான நாலாயிரத்து 99 சதுர கிலோ மீட்டர் பகுதியில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டில் உலகளாவிய நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான முதல் அனுமதியை மத்திய அரசு வரும் ஜூன் மாதம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘ஹெல்ப்’ என்ற ஒற்றை உரிமை திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருக்கும் இந்த அனுமதிக்கான ஏல நடைமுறை கடந்த ஜனவரி 19-ந்தேதியே தொடங்கி இருக்கிறது.

இதன் கீழ் கடலூர் மாவட்டம் தியாவள்ளி முதல் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரையிலான 731 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியில் 10 கிணறுகளும், மரக்காணம் முதல் கடலூர் வரையிலான ஆயிரத்து 794 சதுர கிலோ மீட்டர் கடற்பகுதியில் 4 கிணறுகளும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணியை அடுத்துள்ள புஷ்பவனம் வரையிலான 2 ஆயிரத்து 574 சதுர கிலோ மீட்டர் கடற்பகுதியில் மேலும் 10 கிணறுகளும் அமைக்கப்பட இருக்கின்றன.

இந்த இடங்களில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி படுகை மீத்தேன், ஷேல் ஆயில், ஷேல் எரிவாயு, ஹைட்ரேடுகள் என அனைத்து விதமான ஹைட்ரோ கார்பன்களும் எடுக்க உரிமம் வழங்கப்பட உள்ளது.

பூமியின் கட்டமைப்புக்கு வலிமை தருவது கார்பன். அதனை அகற்றுவதன் மூலம் மண்தளர்ந்து பூமி அதிர்வு ஏற்படும். ஹைட்ரோ கார்பனால் சுற்றுப்புறத்தில் மாசு ஏற்பட்டு, நீர், தரை மற்றும் காற்றில் வாழக் கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் மிக அபாயகரமான பாதிப்பை ஏற்படுத்தும்.

கடல் மற்றும் கடல் படுகையில் எண்ணெய் கசிவு ஏற்படக் கூடும். நிலத்தடி நீருடன் உவர் கடல்நீர் கலப்பதை தவிர்க்க முடியாது. பயிர், செடிகளின் வளர்ச்சி பாதிக்கும். இலைகளின் நிறம் கூட மாறிப்போகும்.

சுத்திகரிக்கப்படாத கழிவுகளிலிருந்து வெளியாகும் நச்சுத்தன்மை நிலத்தை மலடாக்கும். நிலத்தடி நீரும் பாழாகும். வேளாண் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும்.

மனிதர்களுக்கு புற்றுநோய் பாதிப்பை உண்டாக்கும். மூச்சுக்குழாயில் எரிச்சல் உண்டாகும். தோல் பிரச்சினை, முடி உதிர்தல் போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதெல்லாம் விஞ்ஞானிகள் எடுத்துச் சொல்லும் எச்சரிக்கை.

ஹைட்ரோ கார்பன் பொருட்கள் எடுக்கப்படும் இடங்களில் எந்த சிறிய சூழலியல் மாற்றம் ஏற்பட்டாலும், அது ஒட்டு மொத்த சமூக, பொருளாதார கட்டமைப்பிலும் பெரும் விளைவுகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தும்.

ஏற்கனவே, நெடுவாசல், கதிராமங்கலம் மற்றும் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய் பதிப்பு போன்ற திட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் இப்போது மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதி அளிக்க திட்டமிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே, ரசாயணத் தொழிற்சாலைகளால் சூழ்நிலை மண்டலம் பாதிக்கப்பட்டிருக்கிற கட லூர் மாவட்டத்திற்கும், மீன்பிடி தொழிலையும், வேளாண்மையையும் முழு முதற் தொழிலாய் கொண்டிருக்கிற நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் மிகப் பெரிய சூழல் கேட்டை இது உருவாக்கும்.

எனவே, ஹெல்ப் திட்டத்தின் கீழ் ஹைட்ரோ கார்பன் எடுக்க சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி தரும் முடிவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு முழு மூச்சாக குரல் கொடுத்து, திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அந்த குரலுக்கு பக்க பலமாக அனைத்து அரசியல் கட்சியினரும், வேளாண் அமைப்பினரும் மற்ற அனைத்து தரப்பினரும் சேர்ந்து ஒலிக்க வேண்டும்.

அத்துடன், சோழ நாடு சோறுடைத்து என்ற புகழுரைக்கு இலக்கணமாய்த் திகழும், உலகின் மிக நீண்ட சமவெளி கொண்ட தமிழகத்தின் உணவு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையினைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Hydrocarbongas #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com