தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில் ஒருவர் தோற்றாலும் அரசியலை விட்டே விலக தயார்- தங்கதமிழ்செல்வன்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில் இடைத் தேர்தல் அறிவித்தால் 18 பேரும் வெற்றி பெறுவோம். ஒருவர் தோற்றால் கூட அரசியலை விட்டே விலகி விடுவோம் என்று தங்கதமிழ்செல்வன் பேசினார். #Thangatamilselvan
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில் ஒருவர் தோற்றாலும் அரசியலை விட்டே விலக தயார்- தங்கதமிழ்செல்வன்
Published on

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா என்றாலே மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தின் அடிப்படையில் தொடர்ந்து அதனை செய்து வருகிறோம். ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.

எங்கள் அணியில் உள்ள 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இதன் மீதான தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு சாதகமாக வந்தால் நாங்கள் சட்டமன்றத்திற்குள் செல்வோம். இல்லையெனில் மீண்டும் அதே தொகுதியில் நாங்கள் அனைவரும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

18 பேரில் ஒருவர் தோற்றால்கூட நாங்கள் அரசியலை விட்டே விலகி விடுவோம். ஆனால் இது போன்ற துணிச்சல் எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வத்துக்கு உள்ளதா?

5 ரோடு டெண்டர் அறிவிப்பில் அரசுக்கு ரூ.1500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நானும் வெற்றிவேலும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தோம். அது தவறு என்றால் எங்கள் மீது மான நஷ்ட வழக்கு போடலாம். அதை விடுத்து தனிப்படை அமைத்து எங்களை கைது செய்ய முயற்சி செய்து வருகிறார்கள்.

நாங்கள் கொலையாளிகளா? அல்லது தீவிரவாதிகளா? இந்த பொதுக்கூட்டத்தில் கூட நான் கலந்து கொண்டால் என்னை கைது செய்யலாம் என சிலர் தெரிவித்தனர். ஆனால் என் முன்னே நிற்கும் போலீசாரால் கூட என்னை கைது செய்ய முடியவில்லை. ஏனெனில் எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. தற்போதைய ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு டி.டி.வி. தினகரனை முதல்-அமைச்சர் அரியணையில் அமர வைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார். #Thangatamilselvan #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com