

தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அடுத்த முடியனூரை சேர்ந்தவர் மாரிமுத்து விவசாயி. இவரது மகன் அமர்நாத் (வயது 26). எம்.ஏ. பட்டதாரியான இவர் தண்டராம்பட்டு சாத்தனூர் சாலையில் செல்போன் கடை நடத்தி வந்தார்.
மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதியுள்ளார். இன்னும் திருமணம் ஆகவில்லை. மாரிமுத்து குடும்பத்தாருக்கும் அவரது உறவினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது.
இது குறித்து தண்டராம்பட்டு, வானாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் செல்போன் கடையை திறந்த அமர்நாத் பிற்பகல் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.
பின்னர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெற்றோருக்கு சாப்பாடு கொண்டு சென்றார். வயலில் இறங்கி நடந்து சென்றபோது 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அமர்நாத்தை நோக்கி ஓடி வந்தனர்.
இதனை கண்ட அமர்நாத் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடினார். ஆனாலும் விரட்டி சென்ற கும்பல் அமர்நாத்தை வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் தரையில் சரிந்து விழுந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர் அலறியடித்து ஒடிவந்து மகனை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து அமர்நாத்தின் உறவினர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.