தண்டராம்பட்டில் வங்கி கடன் பிரச்சினையில் தந்தையுடன் தகராறு - கணவன்- மனைவி தற்கொலை

தண்டராம்பட்டில் வங்கி கடன் பிரச்சினையில் தந்தையுடன் தகராறில் கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டராம்பட்டில் வங்கி கடன் பிரச்சினையில் தந்தையுடன் தகராறு - கணவன்- மனைவி தற்கொலை
Published on

தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். விவசாயி. இவரது மகன் சந்தோசுக்கும் (வயது 33), சுகன்யா (29) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். சந்தோஷ் சரிவர விவசாயம் செய்யாமல் அதிக அளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

அந்த கடனை திருப்பி செலுத்துவதில் பிரச்சினை ஏற்படவே அவரது தந்தை பாண்டியன், தனது பெயரில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு ஏக்கரை விற்று கடனை அடைத்துள்ளார்.

அதன்பின் மகனுக்கு சென்னையில் மளிகைக்கடை வைத்துக்கொடுத்துள்ளார். சந்தோஷ் குடும்பத்துடன் கடையை கவனித்துக்கொள்வதற்காக சென்னை சென்றார். அங்கு அவரால் கடையை சரிவர நடத்த முடியாததால் மீண்டும் தண்டராம்பட்டுக்கு திரும்பியுள்ளார். அதன்பின் மீண்டும் தனக்கு கடன் வாங்கி தரும்படி தந்தையிடம் கேட்கவே அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் வங்கி கடனில் டிராக்டர் வாங்கியுள்ளனர். அதற்கும் பணம் சரியாக கட்டவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து கடன் தவணையை கட்ட வேண்டும். இல்லையென்றால் டிராக்டரை ஐப்தி செய்து விடுவோம் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாகவும் தந்தை மகனிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் வேதனை அடைந்த பாண்டியன் சென்னையில் வசிக்கும் மகள் வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்டார். மகன் சந்தோஷ் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதனால் மனமுடைந்த சந்தோஷ் தற்கொலை செய்யப்போவதாக மனைவி சுகன்யாவிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com