தாமிரபரணி மகா புஷ்கர விழா - பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

தாமிரபரணியில் புஷ்கர விழாவுக்காக நீராட வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். #ThamirabaraniPushkaram
தாமிரபரணி மகா புஷ்கர விழா - பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
Published on

நெல்லை:

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடக் கூடிய தாமிரபரணி மகா புஷ்கர விழா இந்த ஆண்டு கடந்த 11-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. பல்வேறு ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் சார்பாக தாமிரபரணியில் பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை 64 தீர்த்தக்கட்டங்களிலும் இந்த விழா நடக்கிறது. இதில் நாடுமுழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆற்றில் புனித நீராடி வருகிறார்கள்.

புஷ்கர விழாவின் 5-வது நாளான இன்று அதிகாலையிலேயே ஆற்றில் பக்தர்கள் குவிந்தனர். ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர். பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அங்குள்ள இந்திர கீல தீர்த்தம், திரி நதி சங்கம தீர்த்தம், அகஸ்தியர் அருவி போன்ற இடங்களில் புனித நீராடினர்.

இதேபோல் அம்பை, கல்லிடைகுறிச்சி, அத்தாள நல்லூர், சேரன்மகாதேவி, திருப்புடைமருதூர், முக்கூடல், கோடகநல்லூர், பழவூர், நெல்லை குறுக்குத் துறை, தைப்பூச மண்டபம், வண்ணார்பேட்டை, அருகன்குளம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் படித்துறைகளிலும் இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

அகில பாரதிய துறவியர்கள் சங்கம் சார்பாக பாபநாசத்தில் நடந்து வரும் புஷ்கர விழாவில் இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. இதையடுத்து தாமிரபரணியில் சுவாமி ஐயப்பனுக்கு நீராட்டு நடைபெற்றது. இதை தொடர்ந்து அங்குள்ள சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெற்றது.

இதேபோல் சித்தர்கள் கோட்டம் சார்பாக பாபநாசம் திரிநதி சங்கம தீர்த்தத்தில் இன்று காலை சிறப்பு வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து ஆற்றில் வழிபாடுகள் நடந்தன. காஞ்சி சங்கரமடம் சார்பாக திருப்புடை மருதூரில் நடைபெற்ற புஷ்கர விழாவில் இன்று காலை மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறையில் இன்று காலை சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து தேவார இன்னிசை, வேதபாராயணம் நடைபெற்றது. நெல்லை தைப்பூச மண்டபம் முன்புள்ள படித்துறையில் இன்று காலை ராஜமாதங்கி ஹோமம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணியில் வழிபாடுகள் நடந்தன. சங்கீத சபாவில் பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது.

அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் இன்று காலை சிறப்பு ஹோமம் நடந்தது. 50-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் கலந்துகொண்டு ஹோமம் நடத்தி தாமிரபரணிக்கு வழிபாடு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில் படித்துறையில் இன்று நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்றும் இந்த படித்துறையில் வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் படித்துறையில் புனித நீராடி குரு ஸ்தலமான கைலாசநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்கள்.

ஸ்ரீவைகுண்டம் படித்துறையில் இன்று காலை கண் திருஷ்டி, பயம், தொல்லைகள், வம்பு வழக்குகள் மற்றும் சாபங்களை நீக்கும் ஸ்ரீமகா சுதர்சன ஹோமங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தாமிரபரணியில் புனித நீராடி வழிபட்டனர்.

புஷ்கர விழா நடந்துவரும் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் பாதுகாப்புக்காக ஆற்றில் தீயணைப்பு மற்றும் நீச்சல் வீரர்கள் ரப்பர் படகுகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளனர். படித்துறைகளில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். #ThamirabaraniPushkaram

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com