சசிகலா விவகாரத்தில் கர்நாடக அரசு தான் பதில் சொல்ல வேண்டும்: தம்பித்துரை

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் பெற ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு கர்நாடக அரசு தான் விசாரணை நடத்தி பதில் கூற வேண்டும் என தம்பித்துரை தெரிவித்துள்ளார்.
சசிகலா விவகாரத்தில் கர்நாடக அரசு தான் பதில் சொல்ல வேண்டும்: தம்பித்துரை
Published on

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி விழா ஏற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய துணை சபாநாயகர் தம்பிதுரை விமானம் மூலம் இன்று கோவைக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து பல்லடத்துக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் பெற ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை அங்குள்ள டி.ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கர்நாடக அரசு தான் விசாரணை நடத்தி பதில் கூற வேண்டும். நாங்கள் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை.

நீட் தேர்வை அ.தி. மு.க. என்றுமே ஏற்று கொண்டதில்லை. பாராளுமன்றத்திலும் இது பற்றி குரல் கொடுத்தோம்.

நீட் தேர்வுக்கு அப்போது தி.மு.க.வும், காங்கிரசும் ஆதரவு தெரிவித்து விட்டு இப்போது நீலி கண்ணீர் வடிக்கிறார்கள்.


ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அ.தி.மு.க. எள்ளளவும் ஏற்று கொள்ளவில்லை. மாநில உரிமைகளை பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழி நடக்கும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது.

நீட் தேர்வை நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அ.தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

ஒரு மாநிலத்தில் மருத்துவர்கள், தொழில் கல்வி நிபுணர்கள், விவசாய வல்லுனர்கள் உருவாக்குவது மாநில அரசின் கடமை. இதில் மத்திய அரசு தலையிட கூடாது. மாநில அரசின் உரிமையை குறைப்பதாக அதாவது தமிழகத்தை முனிசி பாலிடியாக (நகராட்சி) மாற்றுவதை ஏற்று கொள்ள முடியாது.

மீனவர்கள் தாக்கப்படுவது எதிர்த்து அ.தி.மு.க. குரல் கொடுக்கும். மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி ஆகியோர் இதுபற்றி பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது வேதனையான வி‌ஷயம்.

அ.தி.மு.க.வில் பிளவு என்பதே இல்லை. ஒரே அணியாக தான் உள்ளோம். எடப்பாடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் லஞ்ச புகார்கள் எல்லாம் எதிர்கட்சிகள் உள்நோக்கத்துடன் கூறி வருகிறார்கள்,

நடிகர் கமல் தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று கூறியுள்ளார். அவர் அரசியலுக்கு வந்து இதை கூற வேண்டும். சிஸ்டம் சரியில்லை என்றால் நீதிமன்றங்கள் உள்ளது. வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் பொத்தாம் பொதுவாக கருத்துக்களை கூறக் கூடாது.

பா.ஜனதாவை கண்டு அ.தி.மு.க. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்காக மட்டுமே அ.தி.மு.க. பயப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று அ.தி.மு.க. தலைமை கழகமும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் முடிவெடுப்பார்கள். சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கொடுக்கப்பட்ட ஆவணங்கள் தவறானது என எதிர் அணியின் (ஓ.பி.எஸ். அணி) மைத்ரேயன் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தலைமைக் கழகமும் தேர்தல் ஆணையத்தில் வழங்கிய ஆவணங்கள் உண்மையானது. எங்களுடைய ஆட்சிக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் முழு பலம் உள்ளது. கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் எங்கள் அணியின் பக்கம்தான் இருக்கிறார்கள்.

அதற்கான ஆவணங்கள் தான் சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு காரணம் காட்டி வழக்கை இழுத்தடித்து தேர்தல் ஆணையத்தை தாமதப்படுத்தலாம் என்றும், இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைப்பதை தாமதப்படுத்தவும் சிலர் சதி செய்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com