புரோ கபடி ‘லீக்’ சீசனில் 500 புள்ளிகளை குவித்த அஜய் தாக்கூர்

புரோ கபடி சீசனில் ரெய்டு மூலம் 500 புள்ளிகளை குவித்து தமிழ்தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் முத்திரை பதித்துள்ளார்.
புரோ கபடி ‘லீக்’ சீசனில் 500 புள்ளிகளை குவித்த அஜய் தாக்கூர்
Published on

ஜெய்ப்பூர்:

5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 11-வது கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

இந்தப்போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ்தலைவாஸ் அணி ஏற்கனவே 13 ஆட்டங்களில் தோற்று ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது.

அந்த அணி 20-வது ஆட்டத்தில் மும்பை அணியை நேற்று எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 38-35 என்ற கணக்கில் வெற்றி பெற்று மும்பைக்கு பதிலடி கொடுத்தது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து 5-வது வெற்றியை ருசித்தது.

தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிக்கு கேப்டன் அஜய் தாக்கூரே காரணம். அவர் கடைசி நேரத்தில் ரெய்டு மூலம் எடுத்த 2 புள்ளியும், ஒரு டேக்கிள் புள்ளியும் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அவர் இந்த ஆட்டத்தில் மொத்தம் 16 புள்ளிகள் (ரெய்டு 15, டேக்கிஸ் 1) எடுத்தார்.

மேலும் புரோ கபடி சீசனில் ரெய்டு மூலம் 500 புள்ளிகளை குவித்தும் அஜய் தாக்கூர் முத்திரை பதித்தார். அவர் இதுவரை 78 ஆட்டத்தில் விளையாடி 501 ரெய்டு புள்ளிகளை எடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.

ராகுல் சவுத்திரி 662 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பர்தீப் நார்வல் 503 புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

ஒட்டு மொத்த புள்ளி கணக்கில் அஜய் தாக்கூர் 521 புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தில் உள்ளார்.

தமிழ் தலைவாஸ் அணி 21-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியசை வருகிற 13-ந்தேதி (இரவு 9 மணி) எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டங்களில் டெல்லி- பெங்களூர் (இரவு 8 மணி), அரியானா-ஜெய்ப்பூர் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com