

தென்காசி:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.9 கோடியை 2 ஆண்டுகளாக செலவு செய்யாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியதை கண்டித்து நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தென்காசி, கடையநல்லூர் ஒன்றிய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பால்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேஷ், பொருளாளர் முருகேசன், மாநில குழு உறுப்பினர் கணபதி, துணை தலைவர் ராமசாமி உள்பட ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.9 கோடியை செலவு செய்யாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியதை கண்டித்தும், மத்திய பட்ஜெட்டில் 2019–ம் ஆண்டை விட நடப்பு ஆண்டுக்கு ரூ.9,500 கோடி குறைவாக ஒதுக்கீடு செய்ததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் விலைவாசி உயர்வு, கல்வி மற்றும் மருத்துவ செலவுகளை கணக்கில் வைத்து தினக்கூலி ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 250 நாட்களாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.