

பள்ளிப்பட்டு:
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 பணிமனைகளில் இருந்து தற்காலிக டிரைவர்கள் மூலம் குறைவான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை நல்லாட்டூரில் இருந்து திருத்தணி நோக்கி அரசு பஸ் (எண். 97 எச்) பஸ்சை தற்காலிக டிரைவர் ஓட்டினார். ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் அதில் பயணம் செய்தனர். பயணிகள் கூட்டத்தால் பஸ் நிரம்பி வழிந்தது.
நல்லாட்டூர், ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள பாலத்தில் வந்தபோது திடீரென பஸ்சில் ‘பிரேக்’ பிடிக்கவில்லை.
இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் திருத்தணி நோக்கி சென்ற மற்றொரு அரசு பஸ்சின் (978) பின்பகுதியில் பயங்கரமாக மோதி நின்றது.
அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கினர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகளான பிரவீணா, சிரஞ்சீவி, மீனா, பிரவீண்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த மாணவ- மாணவிகள் அனைவரும் சிகிச்சைக்காக கூனிமாங் கோடு அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் பஸ்கள் சிக்கியதும் அதில் இருந்த தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் கனகம்மாசத்திரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தற்காலிக டிரைவர்கள் ஓட்டும் அரசு பஸ்களில் பயணம் செய்ய அச்சமாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் பலி ஏற்படவில்லை.
மீண்டும் விபத்து ஏற்படும் முன் தகுதியான தற்காலிக டிரைவர்களை தேர்வு செய்து அரசு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும். பொது மக்களின் உயிரை பற்றி அதிகாரிகள் கவலைப்பட்டதாக தெரிய வில்லை’ என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.