வில்லியனூர் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

வில்லியனூர் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மர்மநபர்களால் உடைக்கப்பட்ட உண்டியலை போலீசார் பார்வையிட்ட காட்சி.
மர்மநபர்களால் உடைக்கப்பட்ட உண்டியலை போலீசார் பார்வையிட்ட காட்சி.
Published on

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உளவாய்க்கால் கிராமத்தில் முத்தால வாயம்மன் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக வேலை செய்யும் சங்கர், நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோவிலை சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது கோவிலின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

மேலும் கோவிலின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 2 மர்மநபர்கள் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வருவதும், ஒருவர் மட்டும் கோவிலுக்குள் சென்று உண்டியலை உடைத்து பணத்தை துணியில் முடிந்து கொண்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com