கடலூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கடலூரில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கடலூர்:

கடலூர் புதுப்பாளையத்தில் தரைக்காத்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் குருக்கள் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குருக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தார்.

அப்போது கோவிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த பணத்தை காணவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் இரவு குருக்கள் கோவிலை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடி விட்டு சென்றது தெரியவந்தது.

உண்டியலில் சுமார் ரூ.3 ஆயிரம் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com