

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ளன.
ஆனால் ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்து இருக்கிறார். அதற்காக கட்சி நிர்வாகிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.
கடந்த வாரம் ஐதராபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது ஆட்சியை கலைப்பதாக இருந்தால் முன்கூட்டியே தொண்டர்களிடம் தெரிவிப்பேன் என்று சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சந்திரசேகரராவ் நாளை வெளியிடுகிறார். இதற்காக 2 நாட்களாக பண்ணை வீட்டில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர்களை இறுதி செய்து உள்ளார். அதன்பின் நேற்று தலைமை செயலாளர் மற்றும் சட்ட சபை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் இன்று சந்திரசேகரராவ் தனது அமைச்சரவையை கூட்டினார். இதில் சட்டசபையை கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சந்திரசேகரராவ், நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார். முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 15 பேர் பெயர்கள் இடம் பெறுகிறது.
தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களில் 15 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட மாட்டாது என்று தெரிகிறது. இவர்களுக்கு மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடமும் எதிர்ப்பு இருப்பதால் சீட் தரக்கூடாது என்று முடிவு செய்து உள்ளார். முதல் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் 15 பேரில் பெரும்பாலும் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களும் எந்தவித புகார்களுக்கும் ஆளாகாதவர்கள் என்று தெரிகிறது.
காமரெட்டி தொகுதியில் கோவர்தன் எம்.எல்.ஏ.வும் ஜெகிட்யல் தொகுதியில் சஞ்சய் மோகம் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உதயமான தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில மொத்தம் உள்ள 119 இடங்களில் சந்திரசேகரராவின் கட்சி 90 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.