மீண்டும் சேவையை தொடங்கியது தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்- பயணிகளிடம் வரவேற்பு இல்லை

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. பயணிகளிடம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.
தேஜஸ் ரெயில்
தேஜஸ் ரெயில்
Published on

திருச்சி:

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் இருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் ரெயில் போக்குவரத்து சேவை மீண்டும் கடந்த 1-ந் தேதியிலிருந்து தொடங்கி உள்ளது.

திருச்சியிலிருந்து சென்னை மற்றும் நாகர்கோவிலுக்குக்கும் திருச்சி வழியாக சென்னையிலிருந்து மதுரைக்கும், கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரெயில்களின் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை.

ஊரடங்கு உத்தரவினால் சென்னையிலிருந்து மதுரை வரை திருச்சி வழியாக இயக்கப்பட்டு வந்த முற்றிலும் குளிர்சாதன வசதிகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் தனது சேவையை கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தியது. தற்போது இந்த ரெயில் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த ரெயில் திருச்சி வழியாக மதுரையை அடைந்தது. மாலையில் மீண்டும் மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றது. ஆனாலும் இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இல்லை. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பயணிகள் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரெயிலில் பயணம் செய்வதை தவிர்த்து வருவதாக தெரிகிறது.

இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுக்க முழுக்க பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன பெட்டிகளில் வெப்ப அளவை 23 டிகிரியில் இருந்து 25 டிகிரி ஆக உயர்த்தி வைத்து உள்ளோம்.மேலும் ஒரு மணி நேரத்திற்கு 6 முதல் 8 முறை வரை காற்றை மறுசுழற்சி செய்து வந்ததை தற்போது ஒரு மணி நேரத்திற்கு 12 முறை மறுசுழற்சி செய்யும் வகையில் மாற்றி அமைத்து இருக்கிறோம். கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com