சக மாணவர்கள் கேலி, கிண்டல் ஐ.டி.ஐ. மாணவர் தீக்குளித்து தற்கொலை

ஆலங்குடி அருகே சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சக மாணவர்கள் கேலி, கிண்டல் ஐ.டி.ஐ. மாணவர் தீக்குளித்து தற்கொலை
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கட்ராம்பட்டி  காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அசோக்ராஜ் (வயது 20). இவர் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ. படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1 வாரமாக அசோக்ராஜ் கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த தகவல் அறிந்த அவரது பெற்றோர் அசோக்ராஜை கண்டித்தனர். 

ஏன் செல்லவில்லை என்று கேட்டபோது, அசோக்ராஜ் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் கிண்டல் செய்வதாக கூறினார். இந்நிலையில் நேற்றும் அவர் படிக்க செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அவரை மீண்டும் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அசோக்ராஜ் வீட்டில் இருந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஆனால் பெற்றோர் தடுத்து விட்டனர். பின்னர் நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கி விட்டனர். 

அதிகாலையில் எழுந்த அசோக்ராஜ் மண்எண்ணெய் கேனுடன் வீட்டின் அருகே உள்ள நாடியம்மன் கோவில் காட்டுப்பகுதிக்கு சென்றார். பின்னர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சக மாணவர்கள் கிண்டல் செய்ததால் ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com