பேனர் கிழிப்பு எதிரொலி: தஞ்சையில் ஓ.பன்னீர்செல்வம் விழாவிற்கு பலத்த பாதுகாப்பு

தஞ்சையில் ஓ.பி.எஸ். பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக கடைகளில் வைக்கப்பட்டுள்ள காமிரா மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேனர் கிழிப்பு எதிரொலி: தஞ்சையில் ஓ.பன்னீர்செல்வம் விழாவிற்கு பலத்த பாதுகாப்பு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை திலகர் திடலில் அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) அணி சார்பில் தர்மயுத்த இணைப்பு விழா இன்று (புதன் கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் ஓ. பன்னீர் செல்வத்தை ஆதரித்து தஞ்சையில் பல்வேறு இடங்களில் பேனர், கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.

இந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஓ. பன்னீர் செல்வம் அணியினர் தஞ்சை ரெயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் டி.எஸ்.பி. தமிழ் செல்வனிடம் மனு அளித்தனர். அதற்கு பதில் அளித்த டி.எஸ்.பி.நீங்கள் அனுமதி இல்லாமல் பேனர் வைத்து உள்ளீர்கள். இப்போது தான் மனு கொடுத்து இருக்கிறீர்கள். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

பேனர் கிழிக்கப்பட்டதை தொடர்ந்து தஞ்சையில் இன்று ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் தர்மயுத்த இணைப்பு விழாவிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஓ. பன்னீர் செல்வத்திற்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே பேனர் கிழிக்கப்பட்ட இடங்களில் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமிரா மூலம் பேனர் கிழித்தவர்கள் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com