

சென்னை:
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி முறைகேட்டுக்கு காரணமான இடைத்தரகர்கள் மற்றும் பணம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதற்கிடையே ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விலும் முறைகேடுகள் நடந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வானது கடந்த 2012-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2013-ம் ஆண்டு சேலத்தில் குறிப்பிட்ட ஒரு மையத்தில் தேர்வு எழுதிய சுமார் 600க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 முதல் 25 பேர் வரை மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில் ஒரு மையத்தில் தேர்வு எழுதிய 600க்கும் மேற்பட்டோர் எப்படி தேர்ச்சி பெற்றார்கள்? என சிலர் புகார் எழுப்பி உள்ளனர்.
மேலும் தகுதித்தேர்வில் முதல் தாளில் வெறும் 4 அல்லது 5 மதிப்பெண் மட்டுமே பெற்ற சிலர் 2-ம் தாளில் 150 மதிப்பெண்களுக்கு 140-க்கு மேல் பெற்றுள்ளனர். இதுவும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
இதேபோல கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற தகுதி தேர்விலும் குறிப்பிட்ட சில இடங்களில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஆதாரத்துடன் புகார் கொடுத்தால், விசாரணை நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த வாரியத்தின் அதிகாரிகள் கூறுகையில், தகுதித்தேர்வில் முறைகேடுகள் குறித்து உரிய ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் நாங்கள் அதனை போலீசாருக்கு அனுப்பி உரிய முறையில் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்போம் என்றனர்.