சாராய வழக்கில் கைதான மேல்மலையனூர் ஆசிரியர் பணியிடை நீக்கம்

சாராய வழக்கில் கைதான மேல்மலையனூர் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.
பணி இடைநீக்கம்
பணி இடைநீக்கம்
Published on

விழுப்புரம்:

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியை அடுத்த நரிப்பள்ளி ஆற்றுப்பாலம் அருகே கடந்த 13-ந்தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வந்த 2 பேரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில், 1¾ லிட்டர் சாராயம் இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், தர்மபுரி டி.வி.கே. நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் (வயது 38), தர்மபுரி அருகே உள்ள அத்தனூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி (44) என்பதும், இவர்கள் இருவரும் தானிப்பாடியில் சாராயம் குடித்துவிட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர். இவர்களில் கந்தசாமி, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் போலீஸ் நிலைய முதல் தகவல் அறிக்கை கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து துறை ரீதியாக ஆசிரியர் கந்தசாமியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com