

சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரி மற்றும் கோவில் அருகே கடையை திறக்கக்கூடாது என அவர்கள் கூறியதை தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
ஆனால் தற்போது அந்த கடை போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது. இதனை மூட வலியுறுத்தி கோட்டாட்சியர் மங்களராம சுப்பிரமணியனிடம், கிராம மக்கள் மனு கொடுத்தனர். பேராசிரியர்கள் சார்பிலும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து செயல்பட்டதால் கிராம மக்கள் திரண்டு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கடை வாசலில் ஏராளமான பெண்கள் நின்று கொண்டு கோஷமிட்டனர். கடையை நிரந்தரமாக மூடும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக்கூறிய கிராம மக்கள் அங்கு பந்தல் அமைத்து, காத்திருப்பு போராட்டம் தொடங்கினர்.
இரவிலும் அவர்கள் வீட்டுக்கு செல்லவில்லை. போராட்ட திடலிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு அங்கேயே விடிய, விடிய அமர்ந்திருந்தனர்.
சாத்தூர் போலீசார் விரைந்து சென்று சமரசம் பேசியும், பெண்கள் ஏற்க மறுத்துவிட்டனர். டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.