

விழுப்புரம்:
சென்னையில் இருந்து திருச்சிக்கு மாங்காய் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவில் மாங்காய் ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ஆட்டோ புறப்பட்டது. ஆட்டோவை காஞ்சீபுரம் மாவட்டம் கோட்டைகாடு பகுதியை சேர்ந்த சண்முகம்(வயது 48) ஓட்டினார். அவருடன் சேம்பலிபுரத்தை சேர்ந்த கண்ணன்(25) வந்தார். மரக்காணம் செட்டிநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று அதிகாலை 4 மணியளவில் சரக்கு ஆட்டோ வந்த போது எதிரே ஒரு டேங்கர் லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கு ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியது.
இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்த டிரைவர் சண்முகம் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து டேங்கர்லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.