

தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆரோக்கிய நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 63) ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மகள் திருமணம் நேற்று முன்தினம் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதற்காக பாபு குடும்பத்தினருடன் முதல் நாள் இரவே வீட்டை பூட்டி விட்டு மண்டபத்திற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் பீரோவில் வைத்திருந்த 12½ பவுன் நகைகளையும், ரூ.1¼ லட்சமும், வெளியே நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இந்த நிலையில் மகள் திருமணம் முடிந்த நிலையில் பாபு நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை-பணம்,மோட்டார் சைக்கிள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனே இது குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த இடத்தில் ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.