டாஸ்மாக் முறைகேடு வழக்கு : செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

செந்தில்பாலாஜிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட இருப்பதாகவும் அப்போது அவரிடம் நேரில் பல்வேறு தகவல்களை சேகரிக்க உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து உள்ளனர்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு : செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
Published on

முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது.

வழக்கு பதிவு

தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி கூட்டுச் சதி மோசடி, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். 120, 167, 409, 109, 420, 61 (2), 201, 316 (5), 13 (2) ஆகிய சட்டப்பிரிவுகளில் செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குனர் விசாகன், டாஸ்மாக் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர் செல்வம், பாஸ்கர், செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரதேஷ் மற்றும் கார்த்திக் உள்பட டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சம்மன்

இது தொடர்பாக 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த செந்தில் பாலாஜியிடம் நேரில் சென்றும் விசாரித்தார்கள். இந்த நிலையில் டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக மேலும் பல்வேறு தகவல்களை திரட்ட வேண்டி இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட இருப்பதாகவும் அப்போது அவரிடம் நேரில் பல்வேறு தகவல்களை சேகரிக்க உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

டிஜிட்டல் ஆவணங்கள்

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் குற்றம் புரிந்ததற்கான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

முகாந்திரம் உள்ளது

அப்போது, முதல் தகவல் அறிக்கையில் தன் மீது பொத்தம் பொதுவாக குற்றச்சாட்டுகள் உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால் விரிவான விசாரணை தேவை என கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜிகே. இளந்திரையன், முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது. காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளது. இதனால் முன் ஜாமின் தர மறுப்பு தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com