

வளர்த்த மரங்களை ஈவு இரக்கமில்லாமல் வெட்டாதீர்கள் என்று கூறி மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு செல்வி கதறி அழுதார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் மனைவி செல்வி (வயது 58). இவர், தனது விவசாய நிலத்தில் மகோகனி, தேக்கு, தென்னை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரங்களை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்து பராமரித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது நிலத்தின் வழியாக உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதாக மின்வாரிய துறை அதிகாரிகள் செல்வியிடம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இங்கு மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதால், இந்த வழியாக மின்பாதை அமைக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வியின் நிலத் தில் உயர் அழுத்த மின் கம்பத்திற்கான கோபுரம் அமைக்கப்பட்டு, மின் கம்பிகளும் பொருத்தப்பட்டது. அப்போது மரங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.97 ஆயிரம் வழங்குவதாக கூறியுள்ளனர்.
இந்தநிலையில் விவசாய நிலத்தில் இருந்த 89 மரங்களை மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வெட்டி அகற்றினர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வி குழந்தையைப்போல் வளர்த்த மரங்களை ஈவு இரக்கமில்லாமல் வெட்டாதீர்கள் என்று கூறி மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.
இச்சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது. செல்வி அதே பகுதியில் அரசுப் பள்ளி கட்டுவதற்காக 10 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.