சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க அமாவாசை நாளில் மகளிர் திட்டத்தை தொடங்கியது ஏன்? அண்ணாமலை கேள்வி

தி.மு.க இருக்கும்வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது.திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தபோதும் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை.
சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க அமாவாசை நாளில் மகளிர் திட்டத்தை தொடங்கியது ஏன்? அண்ணாமலை கேள்வி
Published on

வேடசந்தூர்:

என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். வேடசந்தூர், எரியோடு, வெல்லணம்பட்டி, ஆர்.டி.ஓ.அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயணம் சென்ற அண்ணாமலைக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தி.மு.க.வினரின் வருமானத்திற்காகத்தான் நடத்தப்படுகின்றன. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க இருக்கும்வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது. மக்களின் வருமானம் கல்விக்குதான் செல்ல வேண்டும்.

பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காகவே பிறந்த கட்சி கம்யூனிஸ்டு, அவர்களுக்கு வேறு எந்த கொள்கையும் கிடையாது. தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கடந்து தற்போது இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டி கொண்டிருக்கின்றனர். தி.மு.க.வின் வளர்ச்சியே இதுதான். அவர்கள் குடும்பம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். தொண்டர்கள் அந்த குடும்பத்திற்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மகளிர் உரிமைத்தொகைத்திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு முந்தைய நாளான 14-ந்தேதியே பலருக்கு செல்போனில் பணம் அனுப்பியதாக குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டபோது முழுஅமாவாசை நாளில் தொடங்கினால் திட்டம் சிறப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க அமாவாசை நாளில் திட்டம் தொடங்க நாள் பார்க்கலாமா? திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தபோதும் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். தற்போது பெரும்பாலான அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறை சோதனை பீதியை ஏற்படுத்தி வருகிறது. இலாகா இல்லாத தி.மு.க அமைச்சர் இன்னும் சிறையில் இருக்கிறார். மேலும் சில அமைச்சர்களுக்கு சோதனை விரைவில் வரும்.

செந்தில்பாலாஜி சேராத ஒரே கட்சி பா.ஜ.க மட்டும்தான். அவரை தி.மு.க அரசு தொடர்ந்து பாதுகாத்து வருவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் தனது நிறைவு நடைபயணத்தை பழனியில் அண்ணாமலை இன்று நிறைவு செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com