தனிச்சின்ன தீர்மானத்தின் பின்னணி என்ன? - மமக தலைவர் ஜவஹிருல்லா விளக்கம்

திமுகவுக்கும், மமகவுக்கும் இடைப்பட்ட உறவு, வெறும் தேர்தல் உறவு மட்டுமல்ல. அதை தாண்டிய கொள்கை உறவு.
தனிச்சின்ன தீர்மானத்தின் பின்னணி என்ன?  - மமக தலைவர் ஜவஹிருல்லா விளக்கம்
Published on

மனிதநேய மக்கள் கட்சி இனிவரும் தேர்தல்களில் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்று கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா அறிவித்தார். இதனால் மமக திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரப்பப்பட்டன. இந்நிலையில் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“கடந்த சில நாள்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் உவப்பில்லாத, உண்மைக்கு புறம்பான ஊகங்கள் உலா வருகின்றன.

திமுகவுக்கும், ம.ம.க வுக்கும் பிரிவையும் பிளவையும் உண்டாக்கும் நோக்கில், உண்மையற்றச் செய்திகளை ஊதி பெரிதாக்கி உலா விடப்பட்டதை உணர முடிகிறது.

திமுகவுக்கும், மமகவுக்கும் இடைப்பட்ட உறவு, வெறும் தேர்தல் உறவு மட்டுமல்ல. அதை தாண்டிய கொள்கை உறவு ஆகும்.

மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாகப் போட்டியிட்ட நிலையிலும் திமுக கூட்டணியில் கொள்கையுணர்வோடு நிலை பெற்றது மமக.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மமக வுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற போதும் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பெரும் உழைப்பை தந்ததும் மமகவின் தொண்டர்கள்தான்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மமகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும், நாட்டின் சூழலை கருதி மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக மமகவின் தொண்டர்கள் உழைத்தார்கள்.

தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கிளை அமைப்புகளையும், நிர்வாகக் கட்டமைப்பையும் வீரியமான தொண்டர்களையும் கொண்ட மக்கள் இயக்கமாக மமக இருந்த போதும் நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத ஆதங்கத்தை திமுக தலைமையிடம் தெரிவித்தோமே தவிர, களத்தில் ஒதுங்கிவிடவில்லை. திமுக கூட்டணியின் மகத்தான வெற்றிக்காக மமக தொண்டர்கள் மாபெரும் பங்களிப்பைச் செய்தார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலில் கால சூழ்நிலைகளையும் களத்தின் நிலையையும் கருத்திற் கொண்டு பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டோம். இரண்டிலும் வென்றோம்.

2026 சட்டமன்றத் தேர்தலிலும் அவ்வாறே நாகை, மணப்பாறை தொகுதிகளில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு நாகை தொகுதியில் மட்டும் வென்றுள்ளோம்.

இந்நிலையில் தொடர்ந்து சொந்த சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்த சூழலில், மமகவின் பதிவும் ரத்தானது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இச்சூழலில் கட்சியின் பதிவை மீட்க தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டியது அவசியமாகிவிட்டது.

இதுவே 2026 மே 19,20 தேதிகளில் கூடிய உயர்நிலை குழுவின் ஐந்தாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் நான்கு தீர்மானங்களைப் பற்றி எழுதினால் அது திமுக மமக உறவை மேலும் வலுப்படுத்தும் என்பதாலோ என்னவோ , ஐந்தாவது தீர்மானத்தை மட்டும் தனியாக எடுத்து திரிபுவாத பரப்புரை செய்யப்பட்டுள்ளது.

அதாவது புதிதாக அமைந்துள்ள தவெக அரசில், தனிச்சின்னத்தில் நின்றிருந்தால் அமைச்சர் பதவி பெற்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தோடு அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக திரித்துப் பரப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு.

குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள், வக்ஃபு திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தொடங்கி, திருப்பரங்குன்றம் விவகாரம் வரை திமுக உணர்வுப்பூர்வமாக களத்தில் நின்றது.

நாமும் அவ்வாறே மாநில உரிமைகள் பாதுகாப்பு, தமிழ் மொழி மீதான ஒடுக்குமுறை எதிர்ப்பு, ஆளுநரின் அத்துமீறல் உள்ளிட்ட பல தருணங்களில் ஒருமித்த உணர்வோடு திமுகவுடன் இணைந்து களம் கண்டுள்ளோம்.

எனவே பிறழ உணரப்பட்ட பிழையால் தேவையற்ற விமர்சனங்கள் செய்வதை இரு தரப்பும் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் காக்க தொடர்ந்து இணைந்து களமாடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com