கண்மாயில் மீன்பிடித்த 4 வாலிபர்களை அரை நிர்வாணமாக்கி கொலைவெறி தாக்குதல்- குத்தகைதாரர் உள்பட 5 பேர் கைது

கண்மாயை குத்தகை எடுத்த ராஜ்குமார் என்பவர் காவலுக்கு ஆட்களை போட்டிருந்தார்.சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
வீடியோவில் வாலிபர்களை தாக்கும் காட்சி.
வீடியோவில் வாலிபர்களை தாக்கும் காட்சி.
Published on

ராஜபாளையம்:

நாட்டின் நடக்கும் விரும்பத்தகாத சம்பவங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் குற்றங்களில் ஈடுபடு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சமூக வலைதள வீடியோக்கள் உதவியாக உள்ளன. இதற்கு உதாரணமாக அண்மையில் மணிப்பூரில் பெண்கள் மீதான தாக்குதல் வீடியோ சாட்சி. இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

தமிழகத்தில் கண்மாயில் மீன்பிடித்த வாலிபர்களை அரை நிர்வாணமாக்கி கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதில் பல்வேறு கண்மாயின் மீன்பிடிக்கும் உரிமையை பொதுப்பணித்துறை சார்பில் ஏலம் விடப்பட்டு குத்தகைதாரர்கள் மீன்களை வளர்த்து அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏலம் எடுத்தவர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளி நபர்கள் யாரேனும் மீன்களை பிடித்து விற்கக்கூடாது என்பதற்காக கண்மாய்க்கு காவலுக்கு ஆட்களை போட்டு கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருங்கூர் கண்மாயில் அதிக அளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கண்மாயில் அடிக்கடி மீன்கள் திருட்டு போய் வந்தது. இதன் காரணமாக கண்மாயை குத்தகை எடுத்த ராஜ்குமார் என்பவர் காவலுக்கு ஆட்களை போட்டிருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மருங்கூர் கண்மாயில் சோமையாபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா, அன்பழகன், மனோகர், மனோஜ் ஆகிய 4 வாலிபர்கள் திருட்டுத்தனமாக மீன்பிடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவலாளிகள் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்து குத்தகைதாரர் ராஜ்குமாரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

அவர் 4 பேரையும் போலீசில் ஒப்படைக்காமல் அரை நிர்வாணமாக்கி உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளார். அவருடன் சேர்ந்து சதீஷ், சத்தியராஜ், காளிராஜ், பால்பாண்டி ஆகியோரும் அவர்களை தாக்கி உள்ளனர்.

அப்போது 4 பேரும் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். ஆனாலும் தொடர்ந்து ராஜ்குமார் தரப்பினர் அவர்களை தாக்கினர். மேலும் மீன்பிடித்தற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என மிரட்டினர். இந்த தாக்குதலை ராஜ்குமார் தரப்பை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வேகமாக பரவி வைரலானது. 4 இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடக்கும் பதிவு பார்ப்போர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

ராஜபாளையம் வடக்கு போலீசார் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது 4 வாலிபர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குத்தகைதாரர் ராஜ்குமார், சதீஷ், சத்யராஜ், காளிராஜ், பால்பாண்டி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே தாக்குதலில் காயம் அடைந்த இருவர் எலும்பு முறிவு காரணமாக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com