காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்: அமைச்சர்கள்-அரசியல் கட்சியினர் பங்கேற்பு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 தேர்வில் பள்ளி அளவில் முதல் 2 இடங்களை பெற்ற 500 மாணவ-மாணவி களுக்கு காமராஜர் விருது வழங்குகிறார். பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார்.
மணி மண்டபத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
மணி மண்டபத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
Published on

விருதுநகர்:

விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா நாளை நடக்கிறது. இதில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ந் தேதி அவர் பிறந்த ஊரான விருதுநகரில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை அவரது 121-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவு இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

விருதுநகர்-மதுரை ரோட்டில் உள்ள அவரது நூற்றாண்டு விழா மணிமண்டபமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட செய்திதுறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் அமைச்சர்கள், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். பெண்களின் நூற்பு வேள்வியும் நடைபெறுகிறது.

காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணிக்கம் தாகூர் எம்.பி., விருதுநகர் கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 தேர்வில் பள்ளி அளவில் முதல் 2 இடங்களை பெற்ற 500 மாணவ-மாணவி களுக்கு காமராஜர் விருது வழங்குகிறார். மேலும் சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர், நகர்ப்புற, கிராம செவிலியர், சுகாதார ஆய்வாளர், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஸ்ரீராஜாசொக்கர், ரங்கசாமி, சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் ஆகியோர் செய்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com