

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் திடீரென உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம் (வயது29). இவர் தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த 18-ந்தேதி சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சையில் இருந்தபோது அருணாச்சலத்தை அவரது நண்பர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் 3 போலீசார் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை அருணாசலத்தின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று காலை அருணாச்சலம் திடீரென இறந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அவர் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்கள் திரண்டனர்.
அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவி வருகிறது.