அறக்கட்டளை தனிப்பட்ட சொத்தாக கருதப்படாது: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

சம்பந்தப்பட்டவர் மனுவை வாபஸ் பெற்றநிலையில், வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறக்கட்டளை தனிப்பட்ட சொத்தாக கருதப்படாது: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து!
Published on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அதை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், அவர் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் திமுக அறக்கட்டளை தொடர்பான சில விவரங்களை மறைத்ததாக,

அதே தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட, தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் டி. சிவஞானசம்பந்தம் (73) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வேட்புமனுவில் வேட்பாளரின் தனிப்பட்ட சொத்து விவரங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும், அறக்கட்டளை சொத்துக்கள் தனிப்பட்ட சொத்தாகக் கருதப்படாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

மேலும், அந்த சொத்துக்களில் மு.க.ஸ்டாலினுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவொரு ஆதாயமும் அல்லது சம்பந்தமும் இருக்கிறது என்பதை நிரூபிக்க மனுதாரர் தரப்பில் போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.

தேர்தல் ஆணையமும், இத்தகைய புகார்களுக்குத் தேர்தல் ஆணையத்தை அணுக முடியாது என்றும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனி நபர் புகாரே தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து தனது மனுவை வாபஸ் பெறுவதாக சிவஞானசம்பந்தம் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com