கூடியது சட்டசபை - த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மரிய வில்சன்
Published on

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

அதோடு, கடந்த ஜூலை மாதத்தில், அரசின் அனைத்துத் துறை அமைச்சர்கள், செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

பின்னர், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், துறை ரீதியாக த.வெ.க. அறிவித்துள்ள வாக்குறுதிகள் போன்றவற்றை அந்தந்த துறை அமைச்சர்கள் தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு இருந்தார்.

அதன் பின்னர் அதுபற்றி ஆய்வு மேற்கொண்டும், தமிழக அரசின் நிதி நிலைமையையும் கருத்தில் கொண்டும், பட்ஜெட்டில் அறிவிப்பதற்கான முக்கிய திட்டங்களை முதலமைச்சர் முடிவு செய்துள்ளார்.

அதில் ஒரு சிறப்பம்சமாக, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையில் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம் என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் என தேர்தலுக்கு முன்பு த.வெ.க. தரப்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் எவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளன? என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக சட்டசபை பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

இதனையடுத்து, 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com