

சென்னை:
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன், 5 ஆயிரத்து 574 சிறப்புப் பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, 10 ஆயிரத்து 663 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோவை, கும்பக்கோணம் மற்றும் தஞ்சாவூர் வழியாக செல்லும் பஸ்களும், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை வழியாக செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன.
கோயம்பேட்டில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி வழியாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநிலம் செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பக்கோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் இயக்கப்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 9445014436 என்ற செல்போனை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 3 பஸ் நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.