அனைவரும் போடுவோம் ஓட்டு... வாங்க மாட்டோம் நோட்டு: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் விழிப்புணர்வு ஏற்படுமா?

சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்கிற விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அனைவரும் போடுவோம் ஓட்டு... வாங்க மாட்டோம் நோட்டு: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் விழிப்புணர்வு ஏற்படுமா?
Published on

தேர்தல் களத்தில் ஆளைப் பார்த்து ஓட்டு போட்ட காலம் போய் பணத்தைப் பார்த்து வாக்களிக்கும் நிலை நீண்ட நாட்களாகவே நீடித்து வருகிறது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவுவதால் எப்படியாவது தங்களது தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி இருக்கிறார்கள்.

தங்களது தேர்தல் வாக்குறுதிகள் மூலமாக வாக்காளர்களை கவர்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ள வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் இதன் காரணமாக வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் பொதுமக்கள் வெளிப்படையாகவே எப்போது பணம் கொடுக்கப் போகிறீர்கள் எவ்வளவு கொடுக்கப் போகிறீர்கள்? என்கிற கேள்வியை கேட்டு எங்களது வீட்டில் இத்தனை ஓட்டு உள்ளது மொத்தமாக பணம் கொடுத்து விடுங்கள் என்று வாய் கூசாமல் கேட்டு விடுகிறார்கள்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் அனைவரும் போடுவோம் ஓட்டு வாங்க மாட்டோம் நோட்டு என்பது போன்ற விழிப்புணர்வு பிரசாரங்களை தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மாணவ- மாணவிகள் மூலமாகவும் பதாகைகள் மூலமாகவும் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்கிற விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகளில் பெண்கள் தங்களது கட்டைவிரலை உயர்த்தி காண்பித்தபடி காட்சியளிக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

இப்படி தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் மட்டுமல்ல ஒவ்வொரு தேர்தலிலும் இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரமும் பணம் வாங்கும் வழக்கமும் பொது மக்கள் மத்தியில் மாறாமலேயே உள்ளது.

இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு மக்கள் வாக்களிப்பது தொடர்கிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்காகவே தேர்தல் ஆணையம் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்கிற விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலிலும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் 100 சதவீதம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கி றார்கள். இது பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.

ஏனென்றால் ஓட்டுக்கு பணம் வாங்கி பழக்கப்பட்டு விட்ட மக்கள் அதனை எதிர்பார்த்து காத்திருப்பதும் காலம் காலமாகவே இருந்து வருகிறது. பல தலைமுறைகளைக் கடந்த வாக்காளர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அதே நேரத்தில் இன்றைய இளம் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறு என்கிற மனநிலை ஏற்பட்டிருக்கிறது.

இதன் மூலம் வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டுக்கு யாரிடமும் பணம் வாங்காமல் நிச்சயம் வாக்களிப்பார்கள் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் ஒட்டுமொத்த மக்களையும் ஓட்டுக்கு காசு வாங்காமல் ஓட்டு போட வைப்பது தான் எங்களது தலையாய கடமை என்றும் அதனை தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com