

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி மேல கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு ராமலட்சுமி (வயது 23) என்ற மகளும், ராகுல் (22), முத்து கிருஷ்ணன் (21) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
ஆறுமுகம் விவசாயம் செய்து வரும் நிலையில் ஆடு, மாடுகளையும் வைத்து பராமரித்து வருகிறார். ராமலட்சுமி கங்கை கொண்டான் சிப்காட்டில் தனியார் சோலார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ராகுல் கோவையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடைசி மகன் முத்துகிருஷ்ணன் நாங்கு நேரியில் உள்ள ஒரு ஓட்டலில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் தாங்கள் பணிபுரியும் இடங்களில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ராமலட்சுமி எப்போதும் செல்போனை பயன்படுத்தி கொண்டே இருப்பதாகவும், தனியாக நின்று பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறி முத்துகிருஷ்ணன் விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது எல்லாம் அவரை சத்தம் போடுவது வழக்கம்.
தற்போது சுத்தமல்லி பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழா ஒன்றுக்காக விடுமுறையில் முத்துகிருஷ்ணன் ஊருக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த ராமலட்சுமி மொபைல் போனை தனியாக இருந்து பயன்படுத்தி வந்ததை அவர் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு ராமலட்சுமி வீட்டில் இருந்து மீண்டும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் வீட்டுக்கு பின்புறம் தொழுவத்தில் கால்நடைகளுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ராமலட்சுமிக்கும், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன், ராமலட்சுமியை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரி வெட்டினார். அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் ராமலட்சுமி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் தகவல் அறிந்து சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமலட்சுமியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுதொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலெட்சுமியை கொலை செய்த அவரது சகோதரர் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், ராமலட்சுமி அடிக்கடி செல்போன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். மேலும் அவர் சாதாரணமாக பல தரப்பட்டவர்களிடமும் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கண்டித்தும் கேட்காததால் முத்துகிருஷ்ணன் அவரை கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுகிறது.