

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை மூலம் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் சண்முக விலாசம் மண்டபத்தை இரும்பு கிரில் கேட் கொண்டு அடைத்து உள்ளதாலும், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திடீரென தரிசனத்திற்கு நேர கட்டுப்பாடு வைத்து அறிவிப்பு பலகை வைத்து உள்ளது. அந்த அறிவிப்பு பலகையில் கட்டண தரிசன வழியில் பக்தர்கள் மாலை 6.30 மணி வரைக்கும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணி வரைக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது என பேனர் வைத்துள்ளனர்.
பொதுவாக சாதாரண நாட்களில் பக்தர்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவில் நிர்வாகத்தால் பக்தர்கள் தரிசனம் குறித்து எந்தவித அறிவிப்பும் முறையாக தெரிவிக்கப்படாமலும், பக்தர்களிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக கோவில் நிர்வாகம் நடந்து கொள்வதாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.