

தஞ்சாவூரில் நேற்று காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ஒருவர் குறித்து இரட்டை அர்த்த கருத்தைப் பேசியதாக அவர்மீது வழக்குப் பதியப்பட்டு இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார். செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணையை முடித்த அவர் சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர்.,
“நேற்று தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை குறித்துதான் பேசினேன். ஒவ்வொரு ஆண்டும் ஜூன்.12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை.
தண்ணீரை கேட்டுப்பெற, கர்நாடகாவை எதிர்த்துப் பேச இந்த அரசுக்கு தைரியம் இல்லை. மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட சொல்லினோம். அதனை செய்யவில்லை. அமைச்சர்களின் தவறுகள் குறித்து ஆதாரமாகப் பேசினேன். அதற்கு பதில் சொல்லத் தைரியம் இல்லாமல், என் பேச்சை தவறாக திரித்துப் பரப்புகின்றனர்.
மாநிலத்தில் ஏதேனும் பிரச்னை எழுந்தால் அதை மடைமாற்ற ஏதாவது ஒன்றை செய்வது. தவெக எம்.எல்.ஏக்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது. எல்லாவற்றிற்கும் மடைமாற்று. நேற்று என் பேச்சு விவசாயிகளிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நாளை சட்டசடையில் இதுகுறித்து பேசுவேன் என இந்த கைது நடவடிக்கை.
கைதுக்கு முழு ஒத்துழைப்பு தந்தேன். இன்று காலை அரசு வழக்கறிஞர் கூறுகிறார் என்னை கைது செய்யும் நோக்கமே கிடையாது. விசாரணைக்காகத்தான் அழைத்து செல்கிறோம் என்று. ஒரு தீவிரவாதியை கூட்டி செல்வதுபோல 3000 காவலர்கள் பாதுகாப்போடு சென்னையில் இருந்து சாலைவழியாக 400 கி.மீ. தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.
இதை சட்டப்படியாக சந்திப்போம். நான் எந்த தவறான எண்ணத்திலும் நேற்றுப் பேசவில்லை. குறிப்பிட்டுக் கூறிய பெண்ணை தாழ்த்திப் பேசவேண்டும் என்ற எண்ணம் துளிக்கூட இல்லை. என் குடும்பம் என்னை அப்படி வளர்க்கவில்லை. என் மனைவியுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். மனைவி, தங்கை, மகள் என பெண்களோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.
பொய் வழக்குக்கு அஞ்சும் ஆள் நான் இல்லை. என்னுடன் இந்நேரத்தில் இருந்த பொதுச்செயலாளர்கள், தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. சிலத் தலைவர்கள் நான் பேசியதை முழுதாக பார்க்காமல், நான் தவறாகப் பேசியதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதால் இந்த தரங்கெட்ட அரசு என்னை கைது செய்துள்ளது. நான் எந்த இரட்டை அர்த்தத்திலும் பேசவில்லை, ஒரு அர்த்ததில்தான் பேசினேன். காவிரி தண்ணீர் வரவேண்டும் என்றுதான் பேசினேன், மீண்டும் பேசுவேன். இது ஆட்சியாகவே நான் பார்க்கவில்லை. இது ஒரு சர்க்கஸ் கூடம்.
திமுகவை பார்த்தால் கைது செய்யத் தோன்றும், அதிமுகவைப் பார்த்தால் சோபா அனுப்பத் தோன்றும். முதலமைச்சருக்கு திமுகவின், தமிழ்நாட்டின் வரலாறு தெரியவில்லை. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தகுந்த பதிலை தருவார்கள். தலைவர் மு.க.ஸ்டாலினை பார்க்க இருக்கிறோம். அவர் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான தகுந்த அறிவுரையை தருவார்.” எனத் தெரிவித்தார்.