‘என்.டி.ஏ. கூட்டணியின் ஒரேநோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
‘என்.டி.ஏ. கூட்டணியின் ஒரேநோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

கலைஞரும் - வாஜ்பாயும் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து, நீங்கள் கூட்டணி வைக்கவில்லையா என்று கேட்கிறார். நாங்கள் கூட்டணி வைத்தோமே தவிர; பழனிசாமி மாதிரி அடகு வைக்கவில்லை, அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நாங்கள் கூட்டணி வைத்தபோது, தி.மு.க., தலைவர் கலைஞரிடம்தான் இருந்தது. ஆனால், இப்போது அ.தி.மு.க. அமித்ஷாவிடம்தானே இருக்கிறது? நாங்கள் குறைந்தபட்ச செயல்திட்டம் வகுத்து, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசின் கடிவாளத்தைக் கலைஞர் கையில் வைத்திருந்தோம்.

ஆனால், இப்போது, அ.தி.மு.க. மட்டுமல்ல, என்.டி.ஏ.வில் இணைந்திருக்கும் அத்தனை ஊழல் கட்சிகளின் குடுமிப்பிடியும் அமித்ஷாவிடம்தான் இருக்கிறது. நாங்கள் கூட்டணி வைத்தபோது தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தோம். ஆனால், பழனிசாமி கூட்டணி வைத்து, நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்ததுதான் மிச்சம்!

அதுமட்டுமல்ல, பெயரளவிற்காவது திராவிட கட்சியாக இருந்த அ.தி.மு.க.வை மொத்த அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும் பழனிசாமி, நம்மைப் பார்த்து, இதுதான் நமக்கு கடைசி தேர்தல் என்று சொல்லியிருக்கிறார். வழக்கமாக அமாவாசையை பார்த்து ஆருடம் சொல்லும் பழனிசாமி, இந்த முறையும் தவறான ஆருடத்தையே சொல்லியிருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் தொடங்கி, அம்மையார் சசிகலா வரைக்கும் துரோகங்களை செய்து, முதுகில் குத்தி கைப்பற்றிய அ.தி.மு.க.வை பா.ஜ.க.வுக்கு வாடகைக்கு விட்டுவிட்டு எகத்தாளமாக பேசிக் கொண்டிருக்கிறார். தன்னிலை உணராமல் ஆணவத்தில் ஆடினால் என்ன நிலைமை என்று பழனிசாமி இன்னும் உணரவே இல்லை!

அ.தி.மு.க.வை நான் உடைக்க நினைத்தேன் என்று அபாண்டமாகப் பேசியிருக்கிறார், அ.தி.மு.க.விற்கு வாய்த்த அழிவுசக்தியான பழனிசாமி. தலைமைப் பண்பும், அடக்கமும் இல்லாமல் சொந்தக் கட்சியினரையே துரத்திவிட்டுவிட்டு, சந்தர்ப்பவாதத்திற்காகக் கூட்டணிக் கட்சிகளுக்குக்கூட துரோகங்கள் செய்த பழனிசாமி, இப்படி பேசவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.

அ.தி.மு.க.வில் இருந்து விலகியவர்கள், இன்றைக்குத் தாய்க்கழகமான தி.மு.க.விற்கு வருவதைப் பார்த்து வயிறெரிந்து இப்படி பேசியிருக்கிறார். தி.மு.க.வில் இருந்து பிரிந்ததுதான் அ.தி.மு.க. திராவிட இயக்க உணர்வில் இருந்து விலகி, அந்த இயக்கத்தைத் தவறான பாதையில் பழனிசாமி கொண்டுபோகும்போது, பலரும் விலகுகிறார்கள்; நம்முடைய தாய்க்கழகத்திற்குத் திரும்புகிறார்கள்.

இதில் தவறில்லையே! வழிதவறிச் சென்று, நாட்டிற்கும் - நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்வதுதான், ஏற்றுக் கொள்ள முடியாதது. இதெல்லாம், பா.ஜ.க.வின் பாதமே சரணாகதி என்று இருக்கும் பழனிசாமிக்கு புரியாது.

தடம் மாறிக் கூட்டணி வைத்திருக்கும் பழனிசாமி, செய்த துரோகங்களை சிறிது எண்ணிப் பாருங்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது யார்? இந்தியா முழுவதும் அதற்கு எதிராக இஸ்லாமிய பெருமக்கள் போராடியபோது “எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார்” என்று எகத்தாளமாகக் கேட்டது யார்? வெயில், மழை, குளிர் இதெல்லாம் பார்க்காமல் தலைநகர் தில்லியில் விவசாயிகள் மாதக்கணக்கில் போராடியபோது மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி எந்த அடிப்படைப் புரிதலும் இல்லாமல் அவர்களை எல்லாம் ‘புரோக்கர்கள்’ என்று கொச்சைப்படுத்தி வாய்கூசாமல் பேசியது யார்? துரோகம் செய்ய வேண்டும்.

அதையும் டிசைன் டிசைனாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் பழனிசாமி அவர்கள், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய துரோகம் செய்ய அமைத்திருப்பதுதான், டப்பா எஞ்சின் NDA கூட்டணி! துரோகத்திற்குத் துரோகமே துணை என்பது போன்று அமைத்திருப்பதுதான், NDA கூட்டணி!

NDA கூட்டணிக்கு ஒரே ஒரு நோக்கம்தான். அது என்ன என்றால், தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க வேண்டும். திராவிட மாடல் ஏற்படுத்தியிருக்கும் இந்த வளர்ச்சியை தடுக்க வேண்டும், அழிக்க வேண்டும். இதுதான், NDA கூட்டணியின் நோக்கம்!

NDA-வின் தலைமையாக இருக்கும் பா.ஜ.க.விற்கு, தமிழ்நாட்டில் நம்மை எதிர்ப்பதற்கு வலிமை இல்லை என்று, அ.தி.மு.க.வை விலைக்கு வாங்கியிருக்கிறது! பொதுவாக, பா.ஜ.க-வைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்கு நல்லது செய்யாது; ஆனால், தேர்தல் வந்துவிட்டது என்றால், கண்துடைப்பிற்காக பட்ஜெட்டில் சில மெகா அறிவிப்புகளை கொடுப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு அதைக்கூட செய்ய மனமில்லாத, வஞ்சக எண்ணத்தின் முழு உருவம்தான் NDA.

பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ததில்லை. எந்தச் சிறப்புத் திட்டத்தையும் செய்ததில்லை; நாம் வைத்த எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை! மதுரையில் ஒரு எய்ம்ஸ் அறிவித்தார்கள்; அதன் நிலைமையை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை! சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி தரவில்லை! ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டிருக்கிறோம்; தரவில்லை. குடிநீர் திட்டத்திற்கான நிதியை தரவில்லை.

சரி இதெல்லாம்கூட பரவாயில்லை, எப்படியாவது போராடி, திறமையான நிர்வாகத்தால் நாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இருப்பதிலேயே கொடுமை என்னவென்றால்? அவர்கள் செய்யும் இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக என்ன செய்தார்கள்... நம்முடைய வீட்டுக் குழந்தைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக்கூட கொடுக்காமல் மறுக்கிறார்கள். இதுவரையில் கொடுக்கவில்லை.

இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? எனவே, NDA-வைத் தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும், அதுதான், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது.

தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியில் தொடர வேண்டும். தமிழ்நாடு கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால், பா.ஜ.க. - அ.தி.மு.க கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும்.

நீங்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டும், நாம் போராடுவது தி.மு.க.வின் வெற்றிக்காக மட்டுமல்ல; நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக!” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com