பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாக துறை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
Breakfast Scheme
Published on

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று தமிழக அரசு பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தில் உணவு வழங்குபவர்களை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சத்துணவு திட்டம்

தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சி அமைக்கும்போதெல்லாம், சில முக்கிய திட்டங்களை புதிதாக பொலிவுபடுத்துவது வழக்கம். அதில் முதன்மை பெறும் திட்டம், சத்துணவு திட்டமாகும்.

ஏழை மாணவர்களையும் பள்ளிக்கு அழைத்து வரும் வகையில், மதிய உணவு திட்டத்தை. முதலமைச்சராக இருந்த காமராஜர் கொண்டு வந்தார். அந்த திட்டம் மூலம் அதிகமான ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கினர். எனவே அந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

காமராஜர்

காமராஜருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த கட்சிகள், அந்த திட்டத்தை பொலிவுபடுத்த தொடங்கின. அந்த வகையில், எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1982-ம் ஆண்டு ஜூலையில், அனைத்து மாணவர்களுக்குமான சத்துணவு திட்டமாக அதை கொண்டு வந்தார். முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சத்துணவோடு முட்டையையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டார். ஜெயலலிதா ஆட்சியில் இந்த திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டது.

தி.மு.க. ஆட்சி

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த கடந்த தி.மு.க. ஆட்சியில் முற்றிலும் புதிய வகையில், மாணவர்களுக்கு காலையில் உணவு வழங்குவதற்காக முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் அந்த திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் 37 ஆயிரத்து 447 பள்ளிகளில் படிக்கும் 19 லட்சத்து 34 ஆயிரத்து 230 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

த.வெ.க. அரசு

தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் 15 ஆயிரத்து 454 பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்து 14 ஆயிரத்து 274 மாணவர்கள் பயனடைவார்கள்.

காமராஜர் பெயர்

இந்த நிலையில், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி முதல், காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளின் வருகை மற்றும் உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12.71 என்ற செலவில், 210 வேலை நாட்களுக்காக ரூ.343.55 கோடியை செலவிட நிதி அனுமதியை அரசு அளித்துள்ளது.

டெண்டர் அறிவிப்பு

இந்நிலையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தில் உணவு வழங்குபவர்களை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெண்டரில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நகர்ப்புற வாழ்வாதார குழு, சமூக சேவை அமைப்புகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com