

டாஸ்மாக் முறைகேட்டில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
டாஸ்மாக்கில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கோவை, நாமக்கல், திருப்பூர், சிவகங்கை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன், முன்னாள் மண்டல மேலாளர்கள் ராமதுரைமுருகன், பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ரத்தேஷ்ராஜ் சண்முகவேல், கார்த்திக் என்ற மூலநூர் கார்த்திக் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
இதற்கிடையில் த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக சதித்திட்டம் நடந்ததாக, ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் ஒரு வழக்கை பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் செந்தில்பாலாஜி மீதும், அவரது தம்பி அசோக்குமார் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் இந்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கரூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பரான ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து செந்தில்பாலாஜியும், அவரது தம்பியும் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். முன்ஜாமீன் நிபந்தனைப்படி அவர்கள் இருவரும், திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கரூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பரான ரமேஷ் என்பவர்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்களை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.